வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க நேரிடும்: தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம்
கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் எனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்க்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.
வாக்குப் பதிவு தினத்தன்று மட்டும்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறைப்படி நடந்ததாகவும் பிரசாரத்தின்போது எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரானா இரண்டாவது அலை பரவுவதற்கு தேர்தல் ஆணையம்தான் முக்கியக் காரணம் என நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்று கூறிய நீதிமன்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தது.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிது என்பதை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags: தமிழக செய்திகள்