பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (90) காலமானார்
அட்மின் மீடியா
0
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (90) காலமானார்
சாலமன் பாப்பையா, மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில், பிப்ரவரி 22, 1936 அன்று, சுந்தரம்-பாக்கியம் இணையருக்குப் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியிலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளியிலும் படித்தார். உயர்நிலைக் கல்வியை மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கேயே புது முக வகுப்பு படித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை...
சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராக(tutor) மூன்றாண்டுகள் பணியாற்றினார். பின் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மனைவி ஜெயாபாய் ஆசிரியை. மகன், தியாகமூர்த்தி. மகள் விமலா.
இலக்கிய வாழ்க்கை...
பேச்சாளர்
சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.
முதல் மேடைப் பேச்சு, 1961-ல், புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. 'பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?' என்ற விவாதத் தலைப்புகளில், 'புதுமைக் கவிஞனே' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.
கட்டுரைகள்...
சாலமன் பாப்பையா, பணிகளினூடே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.
தமிழாய்வு
சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார். சாலமன் பாப்பையாவின் இலக்கிய அணுகுமுறை ரசனை சார்ந்த ஆய்வுநோக்கு கொண்டது. மு. வரதராசனை முன்னோடியாகக் கொண்டது.
நாடக வாழ்க்கை...
சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல நாடகங்களை எழுதினார். இயக்கினார். நடித்தார்.
திரை வாழ்க்கை...
சாலமன் பாப்பையா புது வருஷம், எஸ். மேடம், டூயட், பாய்ஸ், முதல்வன், சிவாஜி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.