Breaking News

காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிட வில்லை திருமாவளவன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிட வில்லை திருமாவளவன் அறிவிப்பு 

சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தேர்தலில் போட்டியிட விரும்பினேன். சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடவில்லை. காட்டுமன்னார்கோவிலில் எனக்கு பதிலாக இளைய பெருமான் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார். முன்னோக்கி செல்வது ராஜதந்திரம் என்றால் பின் வாங்குவதும் ராஜதந்திரம்தான். எனது நோக்கத்தை கொச்சைப்படுத்தும் காரணத்தால் எனது யுக்தியை மாற்றி அமைக்கிறேன்

நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். விளிம்பு நிலை மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காகவே இம்முறை போட்டியிட விரும்பினேன். 

2004-ஆம் ஆண்டே எனது பதவியை ராஜினாமா செய்தவன் நான்; சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பின்பும் மக்கள் நலனுக்காகப் பதவியைத் துறந்து வெளியே வந்த வரலாறு எனக்கு உண்டு. 2006-இல் மங்கலூர் தொகுதியிலும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் போட்டியிடாமல் பின்வாங்கினேன். விசிக-வை நயவஞ்சகமாக இந்த கூட்டணியில் இருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். இந்த கூட்டணி வலுப்பெறுவதற்கு நான் முக்கியமானவனாக இருந்துள்ளேன். 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்பது விசிக-வின் கொள்கை முழக்கம். ஆனால், இந்தத் தேர்தலில் அதைத் திட்டவட்டமாக நாங்கள் மறுத்துள்ளோம். 

அப்படியிருக்க, நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாகவும், தொங்கு சட்டசபை அமையும் என்று கணித்து போட்டியிடப் போவதாகவும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

பொதுத் தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது கட்சியின் முடிவு. ஆளூர் ஷாநவாஸுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆதரவு நிலை எடுத்த காரணித்தால் தான் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறுவது அபத்தம். ஷாநவாஸைப் புறக்கணிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சமூகநீதிப் பார்வையிலேயே இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவர் இன்று காலை கூட என்னை வந்து சந்தித்துப் பேசினார். 

வேட்பாளர் தேர்வில் என்னை யாரும் அச்சுறுத்த, கட்டளையிட முடியாது. தன் மீது யாரும் செல்வாக்கு செலுத்த முடியாது. 2026 பொதுத்தேர்தல் வழக்கமான ஒன்று கிடையாது. வலதுசாரி சக்திகள் தமிழகத்தைக் குறிவைத்துத் திட்டமிட்டு வருகின்றன. இதை எதிர்கொள்ளவே சட்டமன்றத்தில் இருக்க விரும்பினேன். 

ஆனால், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்பதை எனது கடந்த கால தியாகங்களே பறைசாற்றும்” என்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback