Breaking News

தேர்தலில் போட்டியில்லை திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு - கமல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தேர்தலில் மநீம போட்டியில்லை; திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு” - கமல் அறிவிப்பு



வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.

இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback