மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை -மகாராஷ்டிராவில் புதிய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா தாக்கல் Maharashtra Assembly Passes Freedom of Religion Bill
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் சர்ச்சைக் குரிய ‘தர்ம சுதந்திர மசோதா 2026’ மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு மதமாற்றத்தடுப்பு சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது
திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
கூட்டாக மதமாற்றம் செய்வோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும்.சட்டவிரோத மதமாற்றத்தின் மூலம் நடைபெறும் திருமணங்கள் அல்லது திருமணம் போன்ற உறவுகள் (live-in relationships) மூலம் பிறக்கும் குழந்தைகள், அந்தத் திருமணத்திற்கு முன்பு அவர்களின் தாய் எந்த மதத்தை சார்ந்திருந்தாரோ அந்த மதத்தை சேர்ந்தவராகவே கருதப்படுவார்.
மதம் மாற விரும்புபவர்கள் மற்றும் அந்தச் சடங்கை நடத்துபவர்கள், குறிப்பிட்ட அதிகாரியிடம் 60 நாட்களுக்கு முன்பே அறிவிக்கவேண்டும். மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றச் சடங்கை நடத்திய நபர் அல்லது நிறுவனம் (பூசாரி, மௌலவி அல்லது அமைப்பு), மதம் மாற்றம் நடந்த 21 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசு அதிகாரியிடம் அது குறித்த பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மதமாற்றத்திற்காக பரிசு பொருட்கள் வழங்குவது அல்லது வாக்குறுதி அளிப்பது குற்றமாகக் கருதப்படும். பரிசுகள், வேலைவாய்ப்பு அல்லது இலவசக் கல்வி வழங்குவதாக கூறுவது சிறந்த வாழ்க்கை முறை தருவதாகக் கூறுவது, தெய்வீகக் சக்தி மூலம் நோயை குணப்படுத்துவோம் என்று கூறுவது போன்றவை குற்றமாகும்.
சாதாரணக் குற்றவியல் சட்டங்களில் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு புகாரளிப்பவர் அல்லது காவல்துறையிடம் இருக்கும். ஆனால், இந்த மசோதாவின்படி யார் அந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்தினாரோ அல்லது அதற்கு உதவியாக இருந்தாரோ அவர்களே அந்த மதமாற்றம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
இந்த முன்மொழியப்பட்ட சட்டம் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, அரசியலமைப்பு வழங்கும் மதத்தைப் பின்பற்றும் மற்றும் பரப்பும் உரிமை யைப் பறிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதேபோல் சத்தீஸ்கர் சட்டமன்றம், சத்தீஸ்கர் மத சுதந்திர மசோதா, 2026-ஐ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம், ஏமாற்றுதல், வற்புறுத்தல், ஆசை காட்டுதல் அல்லது டிஜிட்டல் வழிகள் மூலம் செய்யப்படும் மத மாற்றங்களைத் தடை செய்ய முயல்கிறது.
Tags: தமிழக செய்திகள்
