கத்தார், குவைத், UAE, ஜோர்டான், பஹ்ரைனில் தாக்குதல் நடத்திய ஈரான் - போர் பதற்றம்
ஈரானிடம் அணுசக்தி இருக்கும் நிலையில் தங்களின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் தான் திடீரென இன்று இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரானை குறிவைத்து சரமாரியாக தாக்குதலை தொடங்கியுள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எட்டு நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டு, ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது, “ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானிடம் இருந்து வரும் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரான் ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்கி அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்” என்றார்.
இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்ட டிரம்ப், தனது சமூக ஊடகத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விடுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம். அவர்களின் ஏவுகணைகளைத் தரைமட்டமாக்குவோம் என கூறியுள்ளார்.
இதற்கிடையே பதிலடி தாக்குதலாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இ
ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலைநகர் அபுதாபி, குவைத் மற்றும் கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்திலும், கத்தாரிலும் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.
ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்கு ஆசியாவிற்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
இந்தியர்கள் தற்போதைய நிலவரம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும், இந்தியத் தூதரகத்திடமிருந்து வரும் கூடுதல் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தூதரகத்தின் அவசர உதவி எண்கள்+989128109115+989128109109+989128109102+989932179359
இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.