அரசு ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர்கள் அதுவரை ஆற்றிய பணிக்காலம் ரத்து செய்யப்படும் என்றும், அதனால் அவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவோ ராஜினாமா செய்த ஊழியர்கள் ஓய்வூதியம் கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், டி.பரத சக்ரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978-ன் விதி 23-ன்படி, ஒருவர் பணியிலிருந்து விலகினால் (Resignation), அவர் அதுவரை ஆற்றிய முந்தைய பணிக்காலம் அனைத்தும் செல்லாததாகிவிடும்.ஒருவர் மருத்துவக் காரணங்களுக்காகப் பணி விலகல் செய்தாலும், அவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது. "பணி விலகல் என்பது அனைத்து முந்தைய பணிக்காலத்தையும் இழப்பதாகும்" என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
ஒருவர் முறையான அனுமதியுடன் ஒரு அரசுப் பணியிலிருந்து விலகி, மற்றொரு அரசுப் பணியில் சேரும்போது மட்டுமே முந்தைய பணிக்காலம் ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பணி விலகல் vs விருப்ப ஓய்வு என நீதிமன்றம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள சட்டப்பூர்வ வேறுபாட்டை விளக்கியுள்ளது.
ஒருவர் பணியில் சேரும்போதே அதன் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறார். எனவே, பணி விலகலால் ஏற்படும் பாதிப்புகளை (ஓய்வூதியம் இழப்பு) பின்னர் எதிர்க்க முடியாது. பல ஊழியர்கள் பணி விலகலையும், விருப்ப ஓய்வையும் ஒன்றாகக் கருதுகின்றனர். இது தவறான புரிதல் என்றும், சட்ட ரீதியாக இரண்டுக்கும் வெவ்வேறு விளைவுகள் உண்டு என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு ஓய்வூதியத்திற்காகக் காத்திருக்கும் பல முன்னாள் அரசு ஊழியர்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
