வருமானத்துக்கு அதிகமாக 5 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக பெண் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக 5 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக பெண் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
சென்னையில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. சென்னை திருமங்கலம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 1999 ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது பணியை தொடங்கினார்.
இவர் சட்ட விரோதமாக பெரும் அளவில் பணம் சம்பாதித்ததாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் சென்றுள்ளது. இந்த குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் தங்களது ரகசிய விசாரணையை தொடங்கினர்.
அப்போது கிடைத்த முதற்கட்ட ஆதாரங்களின் படி, கடந்த பிப்ரவரி 13 - ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், பல முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசார் மேற்கொண்ட தீவிர ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2017 - ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025 - ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில், ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு அதிகமாகி உள்ளது.
அதாவது 2017 - ம் ஆண்டு தொடக்கத்தில் வெறும் 3.64 லட்ச ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2025 ம் ஆண்டிற்குள் 4 கோடிகளை கடந்துள்ளது.
கணக்கிடப்பட்ட வருமானத்தை விட 5.42 கோடி ரூபாய் அளவுக்கு அவர் கூடுதலாகச் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சொத்துகளின் மதிப்பு அவரது அதிகாரப்பூர்வ வருமானத்தைவிட தண்ணீரளவு 372 % அதிகமாகும்.
பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய போது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவர் இந்த சட்ட விரோத பணத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
