Breaking News

தி கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டிற்குத் தடை கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

தி கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டிற்குத் தடை கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு



தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இதில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 ஹிந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

வெளியானபோதே பல சர்ச்சைகளைக் கிளப்பியதுடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான திரைப்படமாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், வணிக ரீதியாக வெற்றிப்படமானதுடன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இதனை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே டிரைலரில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரனை இன்று நடைபெற்ற நிலையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிடக் கூடாது எனத் தயாரிப்பாளர்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்க வேண்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். "நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து இறுதி முடிவு எடுக்கும் வரை, படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதே முறையாக இருக்கும்" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அதுவரை 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது.

டீசர் வெளியாகி 16 நாட்களுக்குப் பிறகு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு தரப்பு சுட்டிக்காட்டிய போதிலும், பொது அமைதியைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback