Breaking News

தமிழக முதல்வர் கையால் கோட்டை அமீர் பதக்கம் பெற்ற கலிமுல்லா என்ன செய்தார் தெரியுமா?

அட்மின் மீடியா
0

தமிழக முதல்வர் கையால் கோட்டை அமீர் பதக்கம் பெற்ற கலிமுல்லா என்ன செய்தார் தெரியுமா?

குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடத்தப்பட்டது. 



காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார் அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. அடுத்தாக ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் சென்றனர். 

அதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்துச் சென்றது.

இதனை தொடர்ந்து கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் இந்த விருதை வழங்குகிறது. 

இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லாவிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது

யார் இந்த கலிமுல்லா

காங்கேயம் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலிமுல்லா தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ளார்.மேலும் கோவில் கட்டுவதற்காக மூன்று லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இந்த விருது பெறுபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.

இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.

இஸ்லாமியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அன்வர்தீன் இதுகுறித்து கூறுகையில், 

கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் அழகான ஒரு கோவிலை கட்டமைத்துள்ளார்கள். இந்த கோவில் இந்து முஸ்லீம் அடையாளமாகவும், வரும்கால சந்ததிகளின் அடையாளமாகவும் ஒற்றுமையாகவும் திகழ்கிறது. இதுதான் தமிழ்நாடு என்பதை இந்த உலகத்திற்கு பறைசாற்றுகிறது” என தெரிவித்தார்.இந்து - இஸ்லாமியர்கள் என்கிற பேதமின்றி, இதேபோல் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமை உணர்வுடனும் இருப்போம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என்றால் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback