கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் எஸ்.சி. பிரிவினருக்கான சலுகைகள் நிறுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் எஸ்.சி. பிரிவினருக்கான சலுகைகள் நிறுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
உத்தரப் பிரதேசத்தில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சமூகத்தைச் (SC - Scheduled Caste) சேர்ந்தவர்களுக்கு, ஜாதி அடிப்படையிலான சலுகைகளை வழங்கக் கூடாது என்றும், இதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சஹானி என்பவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அவர் இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து, தன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சஹானி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரி அவர்கள் வழங்கிய தீர்ப்பீல்
மனுதாரர் சஹானி தாக்கல் செய்த மனுவில் தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தாலும், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஒருவர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், அவர் தானாகவே பட்டியல் சமூகத்திற்கான (SC) சலுகைகளை இழந்துவிடுவார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதத்திற்கு மாறும்போது, அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படுவதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ மதத்தில் ஜாதி முறைகள் இல்லை. அப்படியிருக்கும்போது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு பட்டியல் சமூகத்திற்கான சலுகைகளைப் பெறுவது அரசியல் சட்டங்களில் மோசடி செய்வதற்கு ஒப்பானதாகும். இது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்துக்கே முரணாகிவிடும்
உ.பி. சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலர் இதில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை 4 மாதங்களுக்குள் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மதமாற்றம் மற்றும் இட ஒதுக்கீடு சலுகைகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
