Breaking News

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ள சாதிப் பெயர்களை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அரசானை

அட்மின் மீடியா
0
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ள சாதிப் பெயர்களை நீக்கம்
                                            

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை

ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்


குடியிருப்புகள், தெருக்கள். சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகளில் சாதிப் பெயர்களை நீக்குதல்.அல்லது மறுபெயரிடுவது தொடர்பாக ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
(அ) உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள். தெருக்கள். பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துக்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும் அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பாக விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஆ) இப்பணியை கிராம ஊராட்சிகளைப் பொறுத்தளவில், துணை வட்டார அலுவலர்களுடன் இணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (ஊராட்சி) மேற்கொள்ளப்பட வேண்டும்.

(இ) நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி / மாநகராட்சி ஆணையர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஈ) அத்தகைய குடியிருப்புகள். சாலைகள், தெருக்கள். பொதுவான சொத்துக்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்ட பிறகு, அத்தகைய பெயர்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே நிலவும் சூழ்நிலையை, குறிப்பாக, உள்ளூர் மக்களின் கருத்து / பதில்களைப் பொறுத்து மதிப்பிட வேண்டும். மேற்குறிப்பிட்ட பொருண்மை தொடர்பான பெயர்களை தொடர்வதில் களத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவை ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகவும், உள்ளூர் மக்களும் மாற்றத்தைக் கோரினால், அந்தப் பெயர்கள் பொதுவான பெயர்களாக மாற்றப்பட வேண்டும்.

(உ) சில பெயர்கள்/பிரிவுகள் அவசியம் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு. வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பொது/சாதிச்சார்பற்ற தன்மை கொண்ட புதிய பெயருடன் பெயரை மாற்றலாம். எடுத்துக்காட்டான பெயர்கள் இணைப்பு அ-வில் கொடுக்கப்பட்டுள்ளன. சில நேர்வுகளில், பொதுமக்கள் ஏற்கெனவே உள்ள பெயர்களை மாற்ற விரும்பவில்லை எனில், அத்தகைய பெயர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பிரச்சினையின் உணர்திறனைக் கருத்தில் கொண்டு. இப்பொருண்மை மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

(ஊ) மேலும், கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் இந்தப் பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும். உள்ளூர் சமூகத்தின் உணர்வுகள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனினும் அதே வேளையில், சாதி சார்ந்த அறிகுறிகள் தவிர்க்கப்படுதல் உகந்ததாக இருக்கும். இது போன்ற பெயர் நீக்கம் / மாற்றங்களுக்கு கிராமப் பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை கிராம சபையிலும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை ஏரியா சபையிலும் பெரும்பான்மையானோரின் ஒப்புதல் அவசியமாகும். மேலும், தற்போதுள்ள பெயர்களைத் தொடர விரும்பினால், அதற்கான காரணங்களை பரிசீலித்த பின்னர், அவ்வாறு தொடருவது அனுமதிக்கப்படலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback