அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றாகப் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்” என்றும் தெரிவித்து இருந்தார்.இந்தச் சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 31) சேலத்தில் முக்கிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் அதிமுக மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்பி வேலுமணி உடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை 4:30 மணி அளவில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
இதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்;கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்குக் மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும்,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுருந்தார்.
அதிமுக கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை தெளிவான விளக்கங்களுடன் நாளை காலை 11 மணிக்கு கோபியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
