Breaking News

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் கொடுக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்..!

அட்மின் மீடியா
0

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்..!



ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்திலும் ராஜஸ்தானின் சிகாரிலும், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட  14 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. 

குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், Coldrif இருமல் சிரப் தடைசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. 

மேலும் அந்த இருமல் மருந்து தமிழ்நாட்டிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும்.

மேலும் மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தைச் சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாகச் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். 

அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மீது மபியின் பாரசியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கிளினீக் நடத்தி வரும் இவர் தன்னிடம் வந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மருந்தை பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 14 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. 

இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை சார்பில், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.

பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.

டாக்டர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

எந்தவொரு வைரஸ் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக்கூடாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback