நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விவரம் இதோ
நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விவரம் இதோ
நாகை பிரசாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்வதற்காக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார்.
திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.அதன் படி நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கிளம்பிய விஜய்க்கு அங்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
திருவாரூரில் பேசியது என்ன:-
திருவாரூர் நுழையும்போதே விஜய்க்கு கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தின் மீது ஏறி அதனை ஏற்றுக்கொண்ட அவர், தெற்கு வீதி வந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாகக் காண்பிக்கப்படும் பச்சை துண்டை அணிந்து பேசத் தொடங்கிய விஜய், "திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம். ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர், மார்தட்டிக்கொண்டவர் யார் என உங்களுக்குத் தெரியும். ஆனால் அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்னும் தேரை கட்டைபோட்டு ஓடவிடாமல் நிறுத்தியுள்ளார்.
திருவாரூர் சொந்த மாவட்டம் எனப் பெருமையாக சொல்கிறார். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாகக் காய்கிறது. திருவாரூர் மாவட்டத்தை கண்டுகொள்ளவில்லை. உங்களது அப்பா பெயரில் பேனா வைக்க சொல்கிறீர்கள், அனைத்து இடத்திற்கும் அவர் பெயர் வைக்கிறீர்கள். ஆனால், உங்களின் அப்பா பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட இல்லையே. திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை வைத்தால் போதுமா?. நாகையைப் போல குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் ஊர் திருவாரூர்.
இங்கிருக்கும் பல்கலைக்கழகத்தில் எல்லாப் படிப்புகளும் இருக்கிறதா?. திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே மருத்துவம் பார்க்கிற நிலைமைதான் உள்ளது. திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகர். ஆனால் இங்கிருக்கும் பஸ் ஸ்டாண்ட்டை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க சரியான சாலை இல்லை. 50 ஆண்டுகளாக இங்கே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருக்கிறது.
இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரின் வேலை முதல்வர் குடும்பத்துக்கு வேலை செய்வதுதான். 'உங்களுடன் ஸ்டாலின்... உங்களுடன் ஸ்டாலின்...' என்று உங்களது குடும்பத்திற்குத்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். மக்களுக்கு சொல்ல வேண்டாம். ஏனென்றால் மக்களுடன் நீங்கள் நெருக்கமாக இல்லை. இதை நான் சொல்லவில்லை. வார இதழ் ஒன்று சொல்லியுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் வாங்கும் இந்த அரசு இந்த நான்காண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் பல கோடிகள் கமிஷனாக வாங்கி உள்ளனர். இதை என்னிடம் சொன்னது விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்லமாட்டார்கள்.
சிஎம் சார் உங்களது ஆட்சியில் இது நடந்திருக்கிறது. 40க்கு 40 என்பது உங்களுக்கு வேண்டுமானால் தேர்தல் ரிசல்ட் ஆக இருக்கலாம். ஆனால் இங்கே உள்ள டெல்டா விவசாயிகளுக்கு அது அவர்களின் வயிற்றை அடித்துப் பிடுங்கப்பட்ட இந்த கமிஷன் பணம். உங்களது ஆட்சியில் நெல் கொள்முதலில் லஞ்சம் வசூலிக்கப்படுவதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்.
பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்க மாட்டோம். எது சத்தியமோ, எது உண்மையோ அதை மட்டும்தான் நாங்கள் சொல்வோம். ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். உண்மையான மனசாட்சி உள்ள மக்களாட்சி, இதுவே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டோம். நடைமுறைக்கு எது சாத்தியமோ அதனையே வாக்குறுதிகளாகத் தருவோம்." என்று தெரிவித்தார். தொடர்ந்து தொண்டர்களைப் பார்த்து, "எங்கே சென்றாலும் இது சும்மா கூடிய கூட்டம், இது வாக்குகளாக மாறாது என்கிறார்கள். அது அப்படியா?" என்று கேள்வி எழுப்பினார்.
நாகையில் பேசியது என்ன:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் பகுதியில் இன்று (செப். 20) மதியம் தொடங்கினார்.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கங்கள். மீன்பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள்.
இந்த விஜய் களத்திற்கு வருவது புதுசு இல்ல கண்ணா, 2011-ல் பிப்ரவரி 22ஆம் தேதி மீனவ நண்பர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, இதே மண்ணில் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்தோம். இப்போது தமிழக வெற்றிக் கழகமாக வந்திருக்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும்.
நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது. அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.
மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாகையில் நவீன வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை பகுதிகள் இங்கு அதிகம் உள்ளன. இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதும், அதற்கான தீர்வுகளை பற்றி நான் ஏற்கனவே பேசி உள்ளேன்.மீனவர்களுடன் இருப்பது என் கடமை.
தலைவனை இழந்து தவிக்கிற ஈழ தமிழர்களுக்காக நிற்க வேண்டியதும் நம் கடமை. மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதி கடந்து போகிற கபட நாடக திமுக அரசு அல்ல நாம். தமிழக மீனவர்களை பிரித்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக அல்ல” என தவெக தலைவர் விஜய் பேசினார்.
இங்கே ஒரு அரசு கடல்சார் கல்வி பயிற்றும் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம். இங்கே கடல் உணவுகள் சம்பந்தமாக எந்த தொழிற்சாலையையும் அமைக்கவில்லை.ஆனால் ஒவ்வொரு முறை வெளிநாட்டு டூர் போய்விட்டு வரும்போதெல்லாம் சிஎம் சிரித்துக் கொண்டே வெளிநாட்டு முதலீடு என்பார். சி. எம். சார். மனசை தொட்டு சொல்லுங்கள். வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
வேளாங்கண்ணி, கோடியக்கரை, வேதாரண்யம் போன்ற டூரிஸ்ட் இடங்களை முன்னேற்றலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவ டாக்டர் இல்லையாம். நாகப்பட்டினம் புது பஸ்ஸ்டாண்டை சுத்தமாக வைக்கலாம். இங்குள்ள ஸ்டீல் ரோலிங் மில்லை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேலகோட்டை மேம்பாலம் கட்டி 50 வருடமாகிவிட்டது. அதை புதுப்பிக்கலாம்.நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைகின்றன. அதற்கு சேமிப்புக் கிடங்குகள் கட்டியிருக்கலாம். செய்வோம்; செய்வோம் என்றார்கள் செய்தார்களா?. ஆனால், எல்லாத்தையும் செய்த மாதிரியே பெருமையாகச் சொல்வார்கள்.
மேலும் தமிழ் கடவுள் முருகரின் ஆயுதமான வேலை , சுமார் 6 முதல் 7 அடிக்கு அளவிலான வேல் செய்து கொண்டு வந்திருந்தார்கள். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் கட்டி, விஜய்யிடம் அவர்கள் கொடுக்க, அவரும் அதை வாங்கிக் கொண்டு நின்றார். உடனே அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
மறுபடியும் சொல்கிறேன். 2026-ல் இரண்டே இரண்டு பேருக்கு இடையேதா போட்டியே. ஒன்று தவெக - இன்னொன்று திமுக.பூச்சாண்டி காட்டுவதையெல்லாம் விட்டுவிட்டு நீங்க தில்லா, கெத்தா, நேர்மையா எலக்ஷனை சந்திக்க வாங்க. பார்த்துக்கலாம். கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தின் கூட்டணியோடு கொள்ளையடிக்கும் நீங்களா, இல்லை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடலாம். இனி மேல் தடை போட்டால் நான் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன்.எனக்கு தடைபோடும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா?. உங்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள ஆட்சிக்கு வர வேண்டுமா? ( தொண்டர்கள் தவெக என்று முழங்குகின்றனர்.)கேட்டதா மை டியர் சிஎம் சார். இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது. துரத்திக் கொண்டே வரும். தவெகவுக்கு வெற்றி நிச்சயம். நம்பிக்கையாக இருங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
