Breaking News

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றசாட்டு

அட்மின் மீடியா
0

 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி இன்று நடத்தினார். அதில் 

2014ஆம் ஆண்டு முதலே ஏதோ தவறாக இருப்பதாக நான் சந்தேகித்தேன். ஏற்கனவே குஜராத் சட்டமன்றத் தேர்தல் குறித்தே சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு கருத்து கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டன.மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததும் எங்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.மக்களவையில் அமோக வெற்றி பெற்ற நாங்கள் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தோம். இரண்டு தேர்தலுக்கு மத்தியில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

முதல்முறை வாக்காளர்களுக்கான படிவம் 6-ல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஷகுன் ராணி என்ற 70 வயது பெண்ணின் பெயரில் இரண்டு முறை அடுத்தடுத்த வாரங்களில் படிவம் 6 கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாக்காளர் அட்டையும் கொடுக்கப்பட்டு, தேர்தலின்போது இரண்டு வாக்குச் சாவடிக்கும் அவர் சென்று வாக்களித்தற்கான ஆதாரம் உள்ளது. முறையே 98, 96, 95 வயதானவர்கள் பெயரில் வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 33,692 வாக்காளர்களை கண்டறிந்துள்ளோம்.

கர்நாடகா தேர்தல் முறைகேடு

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்துவிட முடியும்.

மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி குற்றச்சாட்டு 

மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது 

சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது.

மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். 

இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம்.மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஹரியானா  தேர்தல் முறைகேடு

ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன.90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன.

கிட்டத்தட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தையும் பாஜக தவறாக நிரூபித்து, பெரும்பான்மையை எளிதாகக் கடந்து 48 இடங்களை வென்றது.

தேர்தல் ஆணையம் மறுப்பு:-

கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நாளை (ஆகஸ்ட் 8, 2025) அன்று தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback