Breaking News

புரட்டாசி மாதத்தில் இலவசமாக வைணவத் திருக்கோயில் ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புரட்டாசி மாதத்தில் இலவசமாக வைணவத் திருக்கோயில் ஆன்மிகப் பயணம் செல்ல  விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு செல்வதற்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்குப் பக்தர்கள் விண்ணப்பிக்கலாமெனத் தமிழக அரசு அறிவிப்பு



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்

தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டைத் தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். 

இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, "புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்

புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது நான்கு கட்டங்களாக, அதாவது 20.09.2025, 27.09.2025, 04.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். 

இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்துச் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 25.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமயஅறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback