Breaking News

ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி... முழு விவரம்...

அட்மின் மீடியா
0
நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளின்
கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் விவசாயப் பயன்பாட்டிற்கு விவசாயிகள்
வண்டல் மண் எடுக்க அனுமதி

தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலன் கருதி ஏரி குளங்களில் வண்டல்மண் இலவசமாக எடுத்து தங்களது வயல்களில் பயன்படுத்துவதற்கு வட்டாச்சியர் அனுமதி பெற்று வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதன் மூலம் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீர் சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்க முடிகின்றது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதால் கிணறுகளிலும், ஆழ்குழாய்களிலும் நீர்மட்டம் உயரும். 


நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும். தற்போதைய சூழலில் அதிகபடியான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தினால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு மண் மலட்டுத்தன்மையுடையதாக மாறுகிறது. எனவே நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விளைநிலங்களில் நிரப்புவதால் மண்வளம் மீட்டெடுக்கப்படுவதுடன் அதிக மகசூல் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு வண்டல்மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 28 நீர்நிலைகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 நீர்நிலைகளிலும் மொத்தம் 116 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

நாளது தேதிவரை 3,753 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் 2,977 விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுக்க வட்டாட்சியரால் அனுமதிக்கப்பட்டு 90.410 கன மீட்டர் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல்மண் விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தற்பொழுது கூடுதலாக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர்நிலைகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள 21 நீர்நிலைகளிலும் மொத்தம் 54 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அரசிதழ் வெளியிடப்பட்டு மொத்தம் 170 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் இ- சேவை மையத்தினை அணுகி இணையத்தில் விண்ணப்பித்து வட்டாட்சியரின் அனுமதி பெற்று வண்டல்மண் எடுத்து பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு; செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். நாடிக்கல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback