கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி யாரும் தொடர்பு கொண்டால் நம்பாதீர்கள் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் +2 மாணவர்களின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு வங்கி கணக்கு, ஓடிபி போன்றவற்றை கேட்டு பணத்தை மோசடி செய்ய கும்பல் ஒன்று முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மாணவ மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆசை வார்த்தை கூறி சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாட்ஸ்அப் எண் மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி உதவித்தொகையானது எஸ்.சி.,/எஸ்.டி., பிசி, எம்பிசி ஆகிய நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
பள்ளியிலிருந்து மாணவர்களின் தகவல்களைப் பெற்றுத்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். எனவே, போன் பே அல்லது ஜி பேயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருக்கலாம் என பெற்றோருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப் போகிறோம், ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என்றும் சில மோசடியாளர்கள் செல்ஃபோனில் அழைக்கலாம். எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
