கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் ,செரிமான கோளாறு சரியாகும் - சென்னை ஐஐடி இயக்குநர் சர்ச்சை பேச்சு வலுக்கும் கண்டனம்
கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் - சென்னை ஐஐடி இயக்குநர் சர்ச்சை பேச்சு
இந்தியாவில் பிரபல கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி மாட்டின் சிறுநீரை குடித்தால் உடலுக்கு நல்லது நோய்கள் குணமாகும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர்,
எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்து விட்டது. சந்நியாசி கோமியத்தை குடிக்க சொன்னார். கோமியம் குடித்த உடன் 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டது.
மேலும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சனைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்றும் அவர் கூறினார்.இந்நிலையில், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்
கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் திரு.காமகோடி. தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.
அறிவியல்படி கோமியம் (மாட்டு சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில் அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்
Tags: தமிழக செய்திகள்
