பெங்களூரில் அதிர்ச்சி பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 2 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்
பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
பெங்களூருவில், பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில், ததமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த 38 வயதான பெண் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார். டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கிருந்த 2 பேரிடம் ஏலஹன்கா செல்வதற்கான பேருந்து எங்கே வரும் என அப்பெண் விசாரித்துள்ளார். பெண்ணிற்கு உதவுவதை போன்று நடித்த 2 பேரும், பேருந்து நிற்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, மார்க்கெட்டிற்கு பின்புறம் உள்ள குடோன் சாலைக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தாலி, செல்போன், பணத்தை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பேருந்திற்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்
