ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டே நாளில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என சேலத்தில் மோசடி 3 பேர் கைது முழு விவரம்
சேலம் மாவட்டத்தில் ரூ.10-க்கு உணவு வழங்கி ரூ. 100 கோடி வரை வசூலித்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நூதன முறையில் அரங்கேறிய மோசடி சம்பவத்தில் மக்கள் ஏமாற இருந்தனர். எனினும், காவல் துறையினர் மோசடி கும்பலை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம், அம்மாபேட்டை ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில், விஜயாபானு என்பவர் "புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை" என்ற பெயரில் அலுவலகம் தொடங்கியுள்ளார் மேலும் அந்த மண்டபத்தி ரூ.10-க்கு உணவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளார்.
அதாவது ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கி, 7 மாதத்திற்கு பின் டெபாசிட் தொகை திருப்பி அளிப்பதாக உறுதியளித்தார்.
ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தாலும், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் கிடைத்ததும், டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மண்டபத்தில் திடீர் சோதனை நடத்தினர்
போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. திருமண மண்டபத்தில் இருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
