வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
தமிழக பதிவெண் இல்லாமல் தமிழக அனுமதிச் சீட்டும் பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் 14 ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) வழங்கப்படுகிறது.
குறிப்பாக சுற்றுலா பயணிகளை யாத்திரை, திருமணம் சுற்றுலா இடங்களை பார்வையிடல் போன்ற காரணங்களுக்காக இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக (AITP) அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறு வகையில் செயல்படுகின்றன என்று போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் படி சுற்றுலா பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் பல இடங்களில் பயணிகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கிவிட்டுள்ளனர். அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் விதிகளுக்கு எதிராக சுற்றுலா திட்டம் ஒப்பந்தத்தின்படியும் பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமல் இயக்கியுள்ளனர்.
எனவே இனி உரிய தமிழக பதிவெண் இல்லாமல் தமிழக அனுமதிச் சீட்டும் பெறாமல் உள்ள வாகனங்கள் 14.06.2024 (வெள்ளி கிழமை) 00.00 மணி முதல் இயங்குவதற்கு அனுமதிக்க பட மாட்டாது. எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது என்பது மட்டும் அல்லாமல் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்
Tags: தமிழக செய்திகள்
