Breaking News

வழிபாட்டு தலங்கள் கட்ட தடையில்லா சான்றுபெற எளிய நடைமுறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

வழிபாட்டுத் தலங்களை பழுது பார்க்கவோ இடித்து விட்டு புதிதாக கட்டவும் மாவட்ட கலெக்டரிடம் தடையில்லா சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் திட்ட அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை சொந்த நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டுமே பொருந்தும்






இது குறித்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

புதிதாக பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்டுவதற்கும், ஏற்கனவே வழிபாட்டில் இருக்கின்ற பள்ளிவாசல்கள் தேவாலயங்களை சீரமைத்து புதுப்பிப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் இருக்கின்ற சிரமங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளை தாங்கள் அறிவீர்கள்.

பல்வேறு மாவட்டங்களில் தடையில்லா சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த விண்ணப்பங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல வருடங்களாக நிலுவையில் இருந்துவருகின்றன. இதனால் மதச்சிறுபான்மையினர் படுகின்ற சிரமங்களையும் வேதனைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து வழிபாட்டு தலங்களுக்கு அரசு அனுமதிபெற ஒரு பொதுவான செயல்பாட்டு வழிமுறையினை (Standard Operating Procedure) அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தோம்.

நமது கோரிக்கையினை கவனமாக கேட்ட நமது முதலமைச்சர் தாயுள்ளத்தோடு அதனை பரிசீலித்து, அதற்கான நடைமுறையினை உருவாக்க, தமிழக அரசின் தலைமை செயலரை பணித்தார். தலைமை செயலர் அவர்களும், உள் துறை, பொதுத்துறை, நகர்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலர்களைக் கலந்து, ஒரு பொதுவான நடைமுறை செயல் திட்டத்தினை உருவாக்கியுள்ளார்கள். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியரும் மற்றும் அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் பின்பற்றவேண்டிய செயல்முறைகளை தெரிவித்துள்ளார்கள்.

வரும் காலங்களில் வழிபாட்டு தலங்கள் புதிதாக கட்டப்படுவதற்கும், ஏற்கனவே இருக்கும் தலங்களை சீரமைத்து புதிதாக கட்டுவதற்கும் இந்த நடைமுறைகள்தாம் பின்பற்றப்படும்.

                      

வழிபாட்டு தலங்கள் சம்பந்தமாக தடையில்லா சான்றிதழ் கேட்டு பெறப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள் முப்பது நாட்களுக்குள் விசாரணை செய்து முடிவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். முப்பது நாட்களுக்குமேல் அக்கோரிக்கைகளை நிலுவையில் வைத்திருக்கமுடியாது. விரைவில் இக்கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வழிபாட்டு தலங்களை பழுதுபார்க்கவோ, புதுப்பிக்கவோ அல்லது முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டவோ மாவட்ட ஆட்சியரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் இதற்கென அதிகாரம் பெற்றிருக்கும் அமைப்புகளிடமோ அல்லது உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்தோ நடைமுறையில் இருக்கும் பொதுப்பயன்பாட்டு கட்டிடங்களின் விதிகளின்படி திட்ட ஒப்புதல் (Plan Approval) பெற்றுக்கொள்ளவேண்டும்.

புதிதாக வழிபாட்டு தலங்கள் கட்டுபவர்கள் அரசின் அனுமதி பெற்ற பின்னரே கட்டிடப்பணிகளை துவங்கவேண்டும். பல நேரங்களில் கட்டிட வேலைகளை துவங்கிவிட்டு அல்லது முழுமையாக கட்டிமுடித்துவிட்டு அரசு அனுமதி பெற ஆணையத்தின் உதவி கேட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அனுமதி வழங்க அரசு விதிகளில் இடமில்லை.

அரசின் இந்த நடைமுறைகள் சொந்த இடங்களில் இருக்கும் வழிபாட்டுதலங்களுக்குத் தான் பொருந்தும். அரசு புறம்போக்கு இடங்களில் இருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு பொருந்தாது என்பதினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை தந்துள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை செயலர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தமிழக சிறுபான்மை மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தி குறிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/sureshkalipandi/status/1797103537140502664

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback