53 பேர் பலியான குவைத் தீ விபத்து நடந்தது என்ன முழு விவரம்
குவைத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் அதிகாலை 4:30 மணியளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 53 நபருக்கு மேல் பலியாக இருப்பதாகவும் மேலும் 50க்கும் மேற்பட்டோர் கடும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.அனைத்து தொழிலாளர்களும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார்கள்.
இந்த 6 மாடி குடியிருப்பில் புதன்கிழமை காலை சுமார் 4.30 மனியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறியதை காண முடிந்தது.
தீ கட்டிடம் முழுவதும் பரவியதில், கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கட்டிடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர்.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில்,53 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சிலர் தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் பஹத் அல் யூசுப் அல் சபா தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காப்பாளர் ஆகியோரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே தீ விபத்தில் தமிழர்கள் பலியானதாக வந்த தகவலையடுத்து குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அயலகதமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
