4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் தமிழக அரசு அறிவிப்பு
4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன.பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159 ஆக உயரும் தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்சிகளை பேரூராட்சியாகவும் , பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன என்றார். அதேபோல் சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200 இல் இருந்து 300 ஆக உயரும் என்றார்
4 மாநகராட்சிகள்:-
நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் இயங்கி வரும் 138 நகராட்சிகளில், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு:-
பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் மற்றும் மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள் அருகிலுள்ள மாநகராட்சிகளுடன் இணைக்கவும், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவினாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி மற்றும் திருவையாறு ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது
149 நகராட்சிகள்:-
13 பேரூராட்சிகள் 11 நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், 8 ஊராட்சிகளை இணைத்து புதிதாக ஒரு நகராட்சி உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சிகளின் எண்ணிக்கை 149 ஆக உயரும்.
தற்பொழுதுள்ள 490 பேரூராட்சிகளின் எண்ணிக்கையானது தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்துவதன் மூலம் 700 பேருராட்சிகளாக அதிகரிக்கவுள்ளது என்றும் கே.என்.நேரு கூறினார்.
சென்னையில் 300 வார்டுகள்:-
சென்னை மாநகராட்சியில் தற்போது வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. இது 300 ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் ஒரு வார்டுக்கு சராசரியாக 40,000க்கும் கூடுதலான மக்கள் வசிப்பதால் வார்டு எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
