Breaking News

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு 3:00 மணி வரை மதிய இடைவேளை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு  3:00 மணி வரை மதிய இடைவேளை அறிவிப்பு 



நேரடியாக சூரியனுக்குக் கீழும், திறந்தவெளிகளிலும் செய்யப்படும் வேலைகளை ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த மூன்று மாத காலத்திற்கும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலான நேரங்களில் திறந்தவெளிகளில் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வது மதியம் 12:30 முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது என்றும் இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 15 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக தொடர வேண்டிய வேலைகளுக்கு அதற்குரிய நிறுவனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் கான்கிரீட் போடுவது, நீர் குழாய்கள், பெட்ரோல் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்க முடியாத திட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் தடைசெய்யப்பட்ட நேரங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கோடை வெப்ப அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, அதன் ஒருங்கிணைந்த தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 20வது ஆண்டாக மதிய இடைவேளையை அமுல்படுத்துகிறது.

இடைவேளையின்போது ஊழியர்களுக்கு நிழலான பகுதி வழங்கப்பட வேண்டும் 

தினசரி வேலை நேரம் காலை, மாலை அல்லது இரண்டு ஷிப்டுகளுக்கும் எட்டு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்.

விதிகளை மீறும் முதலாளிகள் ஒரு தொழிலாளிக்கு திர்ஹாம் 5,000 அபராதம், அதிகபட்சமாக 50,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய இடைவேளைக் கொள்கையில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், 600 590 000 என்ற எண்ணில் அதன் அழைப்பு மையம் மூலம் புகார் அளிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback