Breaking News

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு



சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியும்படி சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘

சிங்கப்பூரில் கடந்த மே 5 முதல் 11ம் தேதிக்குள் 25900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தொற்று பாதிப்பால் சராசரியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 181ல் இருந்து 250ஆக உயர்ந்துள்ளது. நாம் புதிய கொரோனா அலையின் தொடக்க நிலையில் இருக்கிறோம். 

இது சீராக அதிகரிக்கும். அடுத்த இரண்டு முதல் 4 வாரங்களில் தொற்று அலை உச்சத்தில் இருக்கும். அதாவது ஜூன் மாத நடுவில் அல்லது இறுதியில் தொற்றுபரவல் உச்சத்தில் இருக்கும். எனவே பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடியுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய அலையின் தொடக்கத்தில் சிங்கப்பூர் சிக்கி இருப்பதாகவும், வரும் நாட்களில் அது சீராக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா  நோயாளிகளை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவது, மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வழிகாட்டுவது, அப்பணிகளை ஒருங்கிணப்பதற்கான மொபைல் மருத்துவ ஆலோசனைகள், மக்களிடையே கூடுதல் தடுப்பூசி டோஸ்களை வலியுறுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சுகாதார அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. 

மேலும் 60 வயதைக் கடந்தோர் உட்பட கடுமையான நோய்க்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தில் இருப்போர், மருத்துவ ரீதியாக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருப்போர் போன்றவர்கள் கடந்த 12 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் உடனடியாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார். 

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை படுக்கைகளைத் தயாராக வைத்திருக்கும்படி பொது மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

மேலும் வேகமெடுக்கும் கொரோனா திரிபுகளில் ​​கேபி.1 மற்றும் கேபி.2 ஆகியவை சிங்கப்பூரில் மூன்றில் இரண்டு பாதிப்புகளாக கண்டறியப்பட்டுள்ளன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback