Breaking News

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம் தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்  தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புயல்சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகிறது. 


புயல் தமிழக கடலோரத்தை நெருங்கியே செல்லும் என்பதால், அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தென்மேற்கு பருவமழை மே 19 துவங்கி, தமிழக - கேரள கடற்பகுதியை நெருங்கி வருகிறது. 

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.இந்த மண்டலம், புயல் சின்னமாக வலுப்பெற்று, ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியை நெருங்கும் என, வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அளித்த பேட்டியில், 
இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்துக்கு அருகே மேலடுக்கு சுழற்சியாக நிலவும். அங்கிருந்து இது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் போது, இது புயல் சின்னமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளது. 

இது மேற்கு திசை காற்றழுத்தத்தினால் அங்கிருந்து நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் அருகே போகும் வாய்ப்புள்ளது.புயல் காரணமாக நமக்கு மழை இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2,3 நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் அனேக பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

கேரளா, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்னும் 3, நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். 23, 24 ஆம் தேதிக்கு பிறகு, மற்ற உள்பகுதிகளில் மழையின் அளவு படிபடியாக குறைந்துவிடும், என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback