காசா தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழப்பு முழு விவரம் Rafaf On Fıre
காசா தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழப்பு முழு விவரம்
காசா பகுதியில் உள்ள ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று ஹமாஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள முகாம் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆவர். படுகாயம் அடைந்த 20 பேருக்கு ரஃபாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் விமானங்கள் எந்நேரமும் தாக்குதல்களை தொடங்கலாம் என கூறப்படுவதால் ரஃபா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” - ஐநா உறுப்பினர்கள் கண்டனம்
ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தல் அல் – சுல்தான் பகுதியை நிவாரண பகுதியாக இஸ்ரேலே அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காஸாவின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தது குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை இன்ஸ்டாகிராமில் கடந்த 24 மணிநேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர்.
சானியா மிர்சா, த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என பலரும் இதனை பகிர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
Tags: வெளிநாட்டு செய்திகள்
