அனுமதியின்றி தனது பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலை முயற்சி! 3 யூடியூபர்கள் கைது முழு விவரம்
யூடியூபில் அனுமதியின்றி தனது பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலை முயற்சி! 3 யூடியூபர்கள் கைது முழு விவரம்
யூடியூபில் அனுமதியின்றி காதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தனது பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலை முயற்சி
பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு சட்ட விரோதமாக இளம் பெண்ணின் பேட்டியை வெளியிட்டதால் மன உளைச்சலில் தற்கொலை முயற்சி செய்ததால் Veera Talks Double X யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள வி.ஆர் மால் பகுதியில் மாலுக்கு வருவோர் போவோரிடம் 'வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்' என்ற யூடியூப் சேனல் சார்பாக அதன் தொகுப்பாளினி சுவேதா என்பவர் காதல் குறித்து கருத்து கேட்டுள்ளார்.
அப்பொழுது இளம்பெண் ஒருவரிடம் காதல் குறித்து கேட்டுள்ளனர். 'ஒளிபரப்பு செய்ய மாட்டோம் சும்மா ஜாலியா சொல்லுங்க' என கேட்டுள்ளனர். அப்பெண்ணும் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து தெரிவித்த கையேடு இதனை வெளியிட வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளார். யூடியூப் சேனல் தரப்பும் வெளியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பேட்டி குறிப்பிட்ட 'யூடியூப்' சேனல் மற்றும் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த பெண் தெரிவித்த கருத்துக்கு கேலி-கிண்டல்கள் எழுந்தது.
மேலும் தான் அளித்த பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பதற்றத்திலும், மன உளைச்சலிலும் அவர் எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது தோழிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம்,
நான் அந்த 'யூடியூப்' சேனலுக்கு பேட்டி தர முதலில் மறுத்தேன் ஆனால் அவர்கள் எனது அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட மாட்டோம் என்று சொன்னார்கள். அந்த நம்பிக்கையில்தான் நானும் ஜாலியாக கருத்துக்களை தெரிவித்தேன்.
ஆனால் எனது அனுமதி இல்லாமல் எனது பேட்டியை வெளியிட்டு அவமானப்படுத்திவிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட 'யூடியூப்' சேனல் மீதும், பேட்டி எடுத்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பெண் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட 'யூடியூப்' சேனலை நடத்தி வந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் 1-வது தெருவை சேர்ந்த ராம் (வயது 21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த அண்ணாநகர் விஜயா தெருவை சேந்த ஸ்வேதா (31) என்ற பெண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags: தமிழக செய்திகள்
