சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்! வீடியோ இணைப்பு
சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்!
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) வழிவகை செய்கிறது. இந்த சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா என்றால் என்ன?
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், இந்த சட்டத் திருத்தம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது.
1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.
இந்த பழைய சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
ஆனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம். முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி அரசு அவர்களை கைது செய்யாது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும்.
மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை
ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனை தொடர்ந்து பல மாநிலங்களில் தொடர் போராட்டம் நடந்தது, மேலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்பதால், இந்த சட்டத்தின் கீழ்முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
கரோனா பெருந்தொற்று காரணமாக இதற்கான விதிகளை அறிவிக்க மத்திய அரசு 9 முறை கால அவகாசம் பெற்றது. இதனால் சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சிஏஏ சட்டம் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது. சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியிருந்தது.இந்திய குடியுரிமை கோருபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் சிஏஏ சட்ட விதிமுறைகளின் படி இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை, டெல்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு இயக்குநர் தலைமையிலான குழு கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்தது.இதை தொடர்ந்து 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்க அந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள் ஆவர். இதையடுத்து அவர்களில் 14 விண்ணப்பதார்களுக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று முதல்முறையாக வழங்கினார்.
குடியுரிமை பெற்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் குமார் பல்லா, சிஏஏ சட்ட விதிகளின் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ நாட்டின் சட்டம். டெல்லியில் இன்றே 300 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்றார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/RNagothu/status/1790724501925482726
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்


