Breaking News

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

அட்மின் மீடியா
0

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

2000ம் ஆண்டுக்கு பிறகு நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டும்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளின் இருப்பிடம், அவற்றின் உண்மையான பரப்பளவு, தற்போதைய பரப்பளவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய தனி இணையதளத்தை 6 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

மதுரை வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பாலமும், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலையும் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மேற்கண்ட பணிகளுக்கு தடை விதித்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். இந்த திட்டத்தால் நீர்நிலைகளில் நீர் பரவல் பரப்பளவு குறையாது. சேமிப்புத் திறன் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. 

ஆனால் மக்கள் நலன் என்ற பெயரில் நீர்நிலைகளை அழிக்க முடியாது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களைக்கொண்ட இணையதளத்தை 6 மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும். அதில் ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 1.1.2000-க்குப் பிறகு நீர்நிலைகள் தொடர்பாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, நீர்நிலைகள் பழைய நிலைக்கு மீட்க வேண்டும்.என்று தங்களது உத்தரவில் அவர்கள் தெரிவித்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback