Breaking News

பொன்முடி வழக்கு உச்சநீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது - ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்

அட்மின் மீடியா
0

திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் என்ன நடவடிக்கை பாயும் என இப்போது தெரிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொன்முடி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்தது.உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். 

ஆனால் தமிழக ஆளுநர் ரவி, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று ஆளுநர் ரவிக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தது.

பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback