ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தான் பார்க்கவில்லை எனவும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தெரிவித்ததால், அவர் மீதான வழக்கை ரத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.மேலும் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனவும், மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது குற்றம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு முன்பு இன்று (11.03.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து கொடுமையானது” எனவும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்புக்கு நோட்டிஸ் வழங்கியதுடன், தமிழக காவல்துறையினர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
