அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டம் ரத்து: அசாம் அரசு அதிரடி அறிவிப்பு முழு விவரம்
அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டம் ரத்து: அசாம் அரசு அதிரடி அறிவிப்பு முழு விவரம்
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான அரசு உள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையாக உத்தரகண்டில் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா கூறுகையில்,
இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் , 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது. மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறையும்.
தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லாததாலும், குழந்தை திருமணத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.மாநிலத்தில் ஏற்கனவே சிறப்பு திருமண சட்டம் உள்ளது. முஸ்லிம்கள் அதன்படி பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டம் ரத்து செய்யப்படுவதால், வருமானமில்லாமல் பாதிக்கப்படும் 94 பேருக்கு, ஒருமுறை நிவாரணமாக தலா, 2 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை இந்த முஸ்லிம் சட்டத்தின் கீழான பதிவுகளின் ஆவணங்கள் அனைத்தும், மாநிலத்தில் உள்ள பதிவாளர்கள் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இது குறித்த மசோதா விரைவில் அசாம் சட்டசபையில் தாக்கலாகும் என தெரிவித்துள்ளார்
முதல்வர் பிஸ்வ சர்மா கூறுகையில்,
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று நித்தம் அசாம் மக்கள் மனதில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார் அம்மாநில பாஜக அரசின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஷர்மா.நேற்று அவரது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்குவதாக அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், என்பது காலங்காலமாக முஸ்லிம் மக்களின் திருமணங்கள் மற்றும் விவாகரத்தை அங்கீகரித்து வந்த சட்டமாகும்.இந்தச் சட்டத்தின் படி, நியமிக்கப்படும் பதிவாளர், திருமணங்களையும் விவாகரத்து போன்ற தகவல்களைப் பதிவேட்டில் பதிவு செய்து நிர்வகித்து வருவார்.
தற்போது, அசாம் பாஜக அரசு, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அத்தகைய 94 பதிவாளர்களின் பதிவேட்டை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் அப்பட்டமான செயல் ஆகும். மேலும், அத்தகைய பதிவாளர்களின்பதவியை முற்றிலும் ஒழிக்கவும், இழப்பீடாக 2 லட்சத்தை அவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அசாமில் இனி முஸ்லிம்கள் தமது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியாவின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க, நித்தம் புதிய நாடகத்தை அசாம் முதல்வர் பிஸ்வா அரங்கேற்றி வருகிறார். பெரும்பான்மை மக்களின் மத்தியில், இந்த முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை வைத்து வெறுப்பு உணர்வை விதைக்கும் வேலையை இன்று பட்டவர்த்தனமாகச் செய்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெளிப்படையான பாசிசமாகும். இந்தப் பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அசாம் அரசின் இந்தப் பாசிச நடவடிக்கையை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இப்படிக்குஎம்.எச்.ஜவாஹிருல்லா MLAதலைவர்,மனிதநேய மக்கள் கட்சி
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
