நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை
பொதுவாக சிற்றுண்டி கடைகளில் சமைக்கப்படும் பஜ்ஜி, வடை போன்றவைகளை, நியூஸ்பேப்பர்களில் வைத்து கொடுப்பது வழக்கம்.
ஆனால் உணவகங்களில் அச்சிட்ட பழைய பேப்பர்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
ஏன் அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவுப்பொருள் தர தடைவிதிக்கப்பட்டுள்ளது
பொதுவாக செய்தித்தாள் உள்பட அச்சுக் காகிதங்களில் உணவுப் பண்டங்களை கட்டி மடித்துக் கொடுப்பதால் அவை உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. உணவுப் பண்டத்தை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் உணவைத் தயாரித்திருந்தாலும்,அச்சுக் காகிதத்தில் மடித்துக் கொடுப்பதால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கின்றது.
செய்தித்தாள் உள்பட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள இங்க் பல வேதிப்பொருட்களால் ஆனது அச்சுக் காகிதங்களில் உபயோகிக்கும் இங்க் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்களின் கலவை என்பதால் உடல்நலம் பாதிக்கப்படும். இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
பஜ்ஜி,போண்டா,வடை
போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் சுற்றிக்கொடுக்கும் போது,அச்சுக்
காகிதத்தில் உள்ள இங்க் எளிதாக உணவு பொருள்களில் ஒட்டிக்கொள்கிறது. எனவே
செய்தித்தாள் உள்பட அச்சுக் காகிதங்களின் மூலம் உணவுப் பண்டங்களை பேக்
செய்து கொடுப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும்
ஒழுங்கு விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற
புகார்கள் இருப்பின் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்
துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தது
இந்நிலையில் அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட பேப்பரில் உணவுப் பொருட்களை பார்சல் செய்து வழங்குகின்றார்கள் என்ற தகவலை அடுத்து சென்னையில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமராஜ் மற்றும் ஊழியர்கள் உணவகங்கள், தேனீர் கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தில் உணவுப் பொருட்கள், வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்றவற்றை பார்சல் செய்து பொதுமக்களுக்கு வழங்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
