அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை, தாமாக முன்வந்து ஆய்வுக்கு எடுத்த வழக்கில்,
சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறப்பு பாதுகாவலருக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒதுக்கிய விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து எனவும் முறையாக ஒப்புதல் பெற்று மறுவிசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக,அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை யினர் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் அமைச்சர் பெரியசாமி சார்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, இம்மாதம், 13ம் தேதி உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த உத்தரவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறப்பு பாதுகாவலருக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒதுக்கிய விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து எனவும் வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு மார்ச் 28ம் தேதிக்குள் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் ,முறையாக ஒப்புதல் பெற்று மறுவிசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
