அண்ணா நினைவிடம் அருகே ஓபிஎஸ்- சசிகலா சந்திப்பு முழு விவரம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு காரில் கிளம்பியபோது, திருமதி சசிகலா அவர்கள் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த வந்தார்
சசிகலா வருவதை கவனித்த ஓ.பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கிச் சென்று சசிகலாவை பார்த்தார். காரில் இருந்தபடி, கண்ணாடியை இறக்கிவிட்டு பேசிய சசிகலா, பின்னர் காரில் இருந்து இறங்கி ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்து, சில நிமிடங்கள் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ஓபிஎஸ் அருகே நின்ற வைத்திலிங்கத்திடமும் நலம் விசாரித்தார் சசிகலா.பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிஎஸ், சசிகலா இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்:-
நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள். நிச்சயமாக மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள். தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணி சரியாக நடந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். நல்லபடியாக நடக்கும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது வரவேற்கத்தக்கது' என்றார்
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். நமது மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ? அதை மத்திய அரசிடம் கேட்டு பெறக்கூடிய திறமையுள்ள நபர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
Tags: அரசியல் செய்திகள்

