அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் - நடிகை த்ரிஷா ஆவேசம்! முழு விவரம்
கூவத்தூர் விவகாரத்தில் தன்னை ஈடுபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளராக ஏ.வி.ராஜு இருந்தார். இவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளரான சேலம் நகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதையடுத்து, அ.தி.மு.க., தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூரில் நடந்த சம்பவம் குறித்தும், நடிகை த்ரிஷா பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றுமின்றி திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் எனது சட்ட ஆலோசகர் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்" நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் த்ரிஷாவை அவதூறாக பேசியதற்காக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் த்ரிஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார் என்று கூறினேன். எந்த நடிகைகையும் குறிப்பிட்டு பேசவில்லை. நான் எப்பொழுதும் அவ்வாறு பேசுபவன் இல்லை. என்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது” என்று கூறியதுடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
நடிகை திரிஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/trishtrashers/status/1759909973419811114
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
