ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட் முழு விவரம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பறவை காய்ச்சல் எதிரொலி ஆந்திராவின் நெல்லூரில் 3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை மூட உத்தரவு!
நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கு மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சுற்றி 1 கி.மீ தொலைவிற்கு 3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்கக்கூடாது என ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார் மேலும் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராமங்களில் ஏராளமான கோழிகள் இறந்ததை அடுத்து, இறந்த கோழிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, அங்கு பரிசோதனை முடிவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பதை உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின்பு உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயண் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, நோய் பரவலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த ஆட்சியர், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதியளித்தார். சுகாதாரத் துறையினர் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குத் தெரிவிக்கவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்
இந்நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு தமிழக சுகாதார இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் கோரிக்கையின்படி, ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் டாக்டர்கள், பாரா மெடிக்கல் குழுக்களை நியமிக்க வேண்டும். பறவைகள் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் களத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
