Breaking News

சிவகாசி வெம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 10 பேர் உடல் கருகி பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 


விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இன்று (17-02-24) வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்து வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ஆய்வு நடத்திய பின் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், “விதிகளை மீறி அதிகளவு ரசாயன மூலப் பொருட்களைச் சேமித்து வைத்ததே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலை விதி மீறலைத் தடுக்க 4 குழுக்கள் கண்காணித்து வருகிறது” என்று கூறினார்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback