ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கதுறை- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முழு விவரம் hemant soren arrest
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கதுறை முழு விவரம்
ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார்.
இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்பிய ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜனவரி 31-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணையின் போது தாம் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை மீது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக ஹேமந்த் சோரன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டுள்ளார் . நில மோசடி வழக்கில் 7 மணி நேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது
மேலும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்
அதேபோல் ஹேமந்த் அமைச்சரவையில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
