திருப்பூரில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளர் நேசப் பிரபு மீது கொலை வெறி தாக்குதல் முழு விவரம்
நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கம் போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தன்னை சிலர் பின் தொடர்ந்து வருவதாக காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் புகார் அளித்து வந்துள்ளார்.செய்தியாளர் நேசபிரபு
மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் செய்தியாளர் தாக்குதலை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை 24-01-2023 புதன்கிழமை இரவு , அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்,உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று (24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செய்தியாளர் கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேர்காணல் நடத்திய நியூஸ் 18 கார்த்திகை செல்வன் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சேர்ந்த, நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதலை SDPI கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
மர்ம நபர்கள் குறித்து புகார் அளித்தும் அலட்சியமாக இருந்த காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது!என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
