பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! Bilkis Bano case
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு கடந்த 2022 ம் ஆண்டு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது
குஜராத் அரசு குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 பிப்ரவரியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த மோசமான கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் உட்பட 1,044 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானோ (19) என்ற கர்ப்பிணி பெண் 03.03.2002 அன்று தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு வயலில் தஞ்சம் அடைந்தார்.
அப்போது 20க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும், பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோவின் மூன்று வயது மகள் சலேஹாவை பாறையில் முட்டி கொடூரமாக கொன்றனர். மற்ற 6 பேர் உயிரை காப்பாற்றிக்கொண்டு தப்பினர்.
இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைசெய்தது மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ஜனவரி 21, 2008 அன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டு பலாத்காரம் செய்தது, குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.மேலும், பில்கிஸ் பானோவுக்கு 50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு குஜராத் அரசு சிறப்பு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட கலெக்டர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார் அந்த குழு, மேற்கண்ட 11 பேரை விடுதலை செய்யலாம் என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்களை விடுதலை செய்தது
குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்
இந்த வழக்கை உச்சநிதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது அதில் பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது,
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். எனவும்
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

