போர்நிறுத்தம் கிடையாது... ஜ.நா தீர்மானம் நிராகரிப்பு இஸ்ரேல் திட்டவட்டம்!
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் 7,028 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 2,900 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ள ஹமாஸ் 6,743 பேரின் பெயரை வெளியிட்டுள்ளது. இன்னும் 281 பேரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.அதேநேரத்தில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உலக நாடுகள், இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.
அதில் பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தரை வழி தாக்குதலும் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் உடனடியாக காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என ஐ.நா.வின் பொதுச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் இந்த தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் தவிர்த்தன. இதனையடுத்து இந்த தீர்மானம் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் காசாவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உலகம் முழுவதும் பேரணியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, வாட்டிகன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பேரணிகளும், போராட்டங்களும் நடைபெற்றன.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளது. அவர்களில் பாதி பேர் குழந்தைகள்" என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காசா பகுதியில் உள்ள அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்த இஸ்ரேல், குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் இஸ்ரேலின் இருப்புக்கான போர் என்றும் போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
காசாவில் இன்டர்நெட் மற்றும் தொலைப்பேசி உள்பட தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த கோடீஸ்வரர் எலான் மஸ்க், தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் காசாவில் இணையசேவை வழங்கத் தயார் என்று என்று கூறினார்.
ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும், நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
