தொடரும் படுகொலைகள் ஜமா அத்துல் உலமா சபை கடும் கண்டனம் முழு விபரம்
தொடரும் படுகொலைகள் ஜமா அத்துல் உலமா சபை கடும் கண்டனம் முழு விபரம்
தொடரும் படுகொலைகள்
31.07.2023 அன்று ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக வந்த ரயில்வே பாதுகாப்பு படை RPF காவலர் சேத்தன் சிங் என்பவர் அந்த ரயிலில் பயணித்த மூன்று முஸ்லிம்களையும் மலைவாழ் இனத்தைச் சார்ந்த தன் மேலதிகாரி ஒருவரையும் தன் கையிலிருந்த துப்பாக்கியால் வெறித்தனமாக சுட்டுத்தள்ளி பிணமாக்கியிருக்கிறார். காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
உத்திர பிரதேசத்தை சார்ந்த அந்த காவலர் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது கால்களை வைத்துக்கொண்டு "பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைத்தான் நான் கொன்றேன். இந்தியாவில் வாழவிரும்புவோர் மோடி, யோகி ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கத்தி மிரட்டல் விட்டிருக்கிறார்.
தான் கொலை செய்ததற்கான காரணத்தையும் அதனால் ஏற்பட வேண்டிய பலன் என்ன என்பதையும் தெளிவாகப் பேசிய பிறகே தப்பி ஓட முயற்சித்திருக்கிறார். பயணிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டவரே பயணிகளை கொலை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இது குறித்த பூர்வாங்க விசாரணை தொடங்கும் முன்னரே கொலையாளி மனநல பாதிப்புக்கு ஆளானவர் என்று ஊடகங்களில் செய்திகளை பரப்புவது அதிர்ச்சியை அதிகமாக்குகிறது.
மேலும், ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய தாக்குதலில் ஒரு பள்ளிவாசல் தீவைக்கப்பட்டு ஷாஹி ஸஅத் என்ற 19 வயது இமாம் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
எந்தக் கண்டனங்களும் இதுபோன்ற கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளின் உள்ளங்களை உறுத்தவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் அங்கம் வகிக்கும் தீவிரவாத அமைப்புகளில் உயர்பதவிபெற்றிட இது ஒரு தகுதியாக கருதப்படுகிறது. இந்த அவலங்கள் தொடரக்கூடாது. கொலையாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வழக்குப்பதிவு செய்வதில் அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து இதுபோன்ற வழக்குகளை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே அமைதியை நிலைநாட்ட உதவும்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி
