பாமகவின் NLC முற்றுகை போராட்டத்தில் வன்முறை முழு விவரம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது
சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
என்எல்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போரட்டம் நடத்தப்பட்டது
இந்த நிலையில், இந்த போராட்டத்தின் போது பாமகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அன்புமணி ராமதாஸை விடுவிக்கக்கோரி பாமகவினர் அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறை வாகனத்தை கற்களை வீசி தாக்கியத்தில், வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் 12 போலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாமகவினர் கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கல்வீச்சு தாக்குதலில் பாமக-வினர் தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தற்போது நெய்வேலியில் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.போலீசார் மீதும், போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Tags: தமிழக செய்திகள்
