கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடுகளுக்கு நேரில் வழங்கப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் வருகிற 20ம் தேதி முதல் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் பொது விநியோக திட்ட இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கூட்டுறவு துறை மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் நிர்வாக துறை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் தலைவராக செயல்படுவார்.
இந்த துறையுடன் ஒருங்கிணைப்பு துறையாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படும். தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் கண்காணிக்கவும், இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் மாநில கண்காணிப்பு குழு செயல்படும். இந்த குழுவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஒரு உறுப்பினராக இருப்பார்.
இவர் அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தி, திட்டத்தை செயல்படுத்தும் அரசு துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குவார். மாவட்ட ஆட்சி தலைவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட செயல்பாடுகளை திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்.
சென்னையில் மாநகராட்சி ஆணையர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியாக இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான குழு, வட்ட அளவிலான குழு ஆகியவற்றை மாவட்ட ஆட்சி தலைவர் அமைக்க வேண்டும். மாவட்ட குழுவிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைவராக செயல்படுவார்.
இந்த மாவட்ட அளவிலான குழுவில் கூட்டுறவு துறை இணை பதிவாளரை ஒரு உறுப்பினராக நியமிக்கலாம். நியாய விலை கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவது இணைப்பதிவாளரின் பொறுப்பு.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, கட்டுகளாக தொகுக்கப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மண்டல இணை பதிவாளர்கள் கலெக்டருடன் இணைந்து டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று, நியாய விலை கடை பணியாளர்களிடம் உரிய காலத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் மற்றும் பயனாளிகள் முகாம்களுக்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவை குறித்து நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நியாய விலை கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர் இந்த விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
ஒரு வருவாய் வட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலை கடை அடிப்படையில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்படும்.
இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பொது விநியோக நியாயவிலை கடை பணியாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பத்தை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
விண்ணப்பத்தில் அந்த குடும்பத்தின் குடும்ப அட்டை எண்ணை குறித்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் பயனாளிகள் வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறித்து கொடுக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு முகாம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்படும்.
ஒரு குடும்பத்துக்கு வழங்கிய விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த கூடாது.
ஒவ்வொரு நியாய விலை கடையிலும் எந்தெந்த நாட்களில், எந்தெந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரத்தை தகவல் பலகையில் தரியும் வகையில் வைக்க வேண்டும்.
முதல் நாளில் காலை 30 விண்ணப்பங்களும், பிற்பகல் 30 விண்ணப்பங்களும் பதிவு செய்ய நேரமிட்டு வழங்க வேண்டும். அடுத்தடுத்து நாட்களில் ஒரு நாளைக்கு 80 விண்ணப்பங்கள் வரை பதிவு செய்யலாம்.
பொது விநியோக திட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க தேவையில்லை. அத்தகைய குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய விருப்பப்பட்டால் கடைகளுக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்
எக்காரணத்தை கொண்டும் நியாயவிலை கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை இப்பணியில் ஈடுபடுத்த கூடாது.
18ம் தேதி முதல் குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் முதலிய விவரங்களை அடங்கிய விண்ணப்ப படிவங்களை நியாய விலை கடை பணியாளர்கள் எழுதுவார்கள்.
20ம் தேதி முதல் நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Tags: தமிழக செய்திகள்

