மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளரே ரத்து செய்யும் நடைமுறை முழு விவரம்
தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வது குறித்து புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவுச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். மேலும் அது போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் படி பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம்.அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். இதற்கு மேல் பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உடனடி (தட்கல்) டோக்கன் வசதி
பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக ரூ.5,000/- செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம்.இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்



